தினமும் பச்சை தேங்காய் மென்று சாப்பிட்டால் என்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா?

உலகில் வெப்ப மண்டல நாடுகளில் மட்டுமே விளைகின்ற ஒரு பணப்பயிராக தேங்காய் இருக்கிறது. பூமியின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் இளநீர், தேங்காய் போன்றவற்றை தங்களது அன்றாட உணவு தயாரிப்பிலும் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு இயற்கை உணவாக இருக்கும் தேங்காயை தினமும் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் மருத்துவ ரீதியான நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.


கிருமிநாசினி உணவு


நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் இருந்து வெளிப்புற சுற்றுச்சூழல் அனைத்திலும் நுண் கிருமிகள் இருக்கின்றன. இவை சமயங்களில் நம்மை தொற்றிக்கொண்டு உடல்நல பாதிப்புகளை உண்டாக்குகின்றன. தேங்காய் இயற்கையிலேயே ஒரு சிறந்த கிருமிநாசினியாக திகழ்கிறது. தேங்காயில் இருக்கும் மோனோலாரின் மட்டும் லாரிக் அமிலங்கள் நமது ரத்தத்தில் கலந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு உடலில் பரவி இருக்கின்ற நுண்கிருமிகளை அழித்து, உடலை தூய்மை செய்வதோடு, மேற்கொண்டு புதிய நுண் கிருமிகள் தொற்று ஏற்படாதவாறு காக்கிறது.


பற்கள் மற்றும் எலும்புகள் வலுப்பெற


தேங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளன. தினமும் காலையில் சிறிதளவு புதிய பச்சை தேங்காயை மென்று தின்பதால் உடலுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் கிடைத்து எலும்புகள் மற்றும் பற்களை வலுவடையச் செய்கிறது. மேலும் தேங்காயில் இருக்கும் வேதிப்பொருட்கள் எலும்புகளை வலிமைப்படுத்தி எதிர்காலங்களில் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் ஏற்படாமல் காக்கிறது. மேலும் பற்களுக்கு பளபளப்பு தன்மையையும் கொடுக்கிறது.


சரும நலம் மேம்பட


நமது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கவும், முகப்பரு மற்றும் தோல் அரிப்பு பிரச்சனைகளை போக்கவும் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக தேங்காய் இருக்கிறது. தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது. சுருக்கங்களை போக்கி இளமைத் தோற்றத்தைத் தருகிறது. மேலும் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதை தடுப்பதோடு தோல் அரிப்பு போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் போக்குகிறது.


தலைமுடி உதிர்வை தடுக்க


இன்று பலருக்கும் இளநரை ஏற்படுதல், முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் தோன்றி அவர்களை மனதளவில் சோர்வடைய செய்கிறது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப்பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.