உலகின் அனைத்து நாட்டு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகின்றன பிரதான 10 உணவு வகைகளில் உருளைக்கிழங்கு இடம்பெறுகிறது. உருளைக் கிழங்கு பூமிக்கடியில் விளைகின்ற ஒரு கிழங்கு வகை ஆகும். இது தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிர்வகை. பிற்காலத்தில் காலனி ஆதிக்க நாட்டின் வியாபாரிகளால் உலகெங்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து அப்படியே சாப்பிட்டாலே பசியை போக்க வல்ல ஒரு உணவாக இருக்கிறது. இந்த உருளைக்கிழங்கு உலக மக்கள் அனைவரின் வரவேற்பை பெற்ற ஒரு உணவாக இருக்கிறது. உருளைக்கிழங்கை அதிகம் சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் உணவு
அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும். அதிக சக்தியை அளிக்கக் கூடிய உணவாகவும் அதே நேரத்தில் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு உணவு வகையாக உருளை கிழங்கு கருதப்படுகிறது. எனவே தான் கடினமான உணவுகளை செரிமானம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதே நேரம் ஒரே நாளில் அதிக அளவில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். காரணம் உருளைக்கிழங்கு அதிகம் சாப்பிடும்போது வாயுத் தொந்தரவுகளை ஏற்படுத்தக்கூடும்.