நிலவேம்பு கசாயம் குடிப்பதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள் என்ன தெரியுமா?

நிலவேம்பு என்பதே இந்தியா, இலங்கை மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கிராமப் பகுதிகள் மற்றும் இயற்கை வளம் நிறைந்த காடுகளில் விளைகின்ற ஒரு அற்புத மூலிகை செடியாகும். பன்னெடுங்காலமாகவே நிலவேம்பு சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், சமீப வருடங்களில் டெங்கு சுரத்திற்கு எதிராக நிலவேம்பு கஷாயம் மருந்தாக பயன்படுத்தப்பட்ட பிறகே இந்த மூலிகை பற்றி பலரும் அறிந்து கொண்டுள்ளனர். தற்போது பல இடங்களில் பல்வேறு தரப்பினராலும் இலவசமாகவே மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் கொடுக்கப்பட்டாலும், உண்மையான நிலவேம்பு கசாயம் என்பது நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம் ), பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு ஆகியவற்றின் மிக சரியான விகிதத்தில் தயாரிக்கப்படும் கலவையே நிலவேம்புக் குடிநீர் அல்லது நிலவேம்பு கசாயமாகும். அத்தகைய நிலவேம்பு குடிநீர் பருகுவதால் ஏற்படும் மருத்துவ ரீதியிலான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.